Tuesday, 3 December 2019

மாவட்டக் கல்வி அலுவலருக்கு வரவேற்பு மடல்


          எங்கள் பள்ளிக்கு வருகை தந்து சிறப்பித்துள்ள மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களுக்கு வாசித்து அளிக்கப்படும் வரவேற்பு மடல்.

          கல்வி என்னும் கலங்கரை விளக்காக நம் மாவட்டம் முழுவதும் வழிகாட்டி ஒளிவிட்டுக்கொண்டிருக்கும் மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களே வருக! வருக!

          கல்வியை ஐயமின்றி கற்று, அத்துறையிலேயே கல்வி நிறுவனங்களையும் ஆசிரியர்களையும் மாணவர்களாகிய எங்களையும் வழிநடத்தும் மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களை வணங்கி வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

          ‘நிலத்தின் தன்மை பயிர்க்கு உளதாகும்’ என்பது ஆன்றோர் வாக்கு. நாம் வாழும் இடத்தைத் தூய்மையாக வைத்துக்கொண்டால்தான்  உடல் நலமும் மன நலமும் சிறக்கும் என்பதை நாம் அறிவோம். சுத்தம் சுகம் தரும் என்பதை நன்குணர்ந்து, நமது பள்ளி வளாகத்தைத் தூய்மையாக வைத்திருந்ததை அடையாளம் கண்டு மாவட்டக் கல்வி அலுவலர் அவர்கள் நம்மையும் நம் பள்ளியையும் பாராட்டி  உள்ளார்கள்.

          சுத்தமாக மட்டும் அன்று, மரம், செடி, கொடிகள், பூக்கள் எனப் பசுமை நிறைந்ததாக எம் பள்ளியைப் பராமரித்து வருகிறோம். எனவே, ‘சுற்றுச் சூழலைப் பேணிக் காக்கும் பள்ளிகளின் வரிசையில்,  ‘மாவட்டத்திலேயே சிறந்த பள்ளி’ என நம் பள்ளியைத் தேர்வு செய்தமைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

          இப்போது மட்டும் அன்று, இனி எப்பொழுதும் இந்தத் தூய்மையையும் அழகையும் பாதுகாப்போம் என்று உறுதி கூறி, விழாவைச் சிறப்பிக்க வந்திருக்கும் மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களைப் பணிவுடன் வணங்கி வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
                                      நன்றி!
                                                                             இங்ஙனம்
                                                                             மாணவர்கள்

உங்கள் நண்பர், பிறந்த நாள் பரிசாக அனுப்பிய எழுத்தாளர் எஸ். இராமகிருட்டிணனின் ‘கால் முளைத்த கதைகள்’ என்னும் நூல் குறித்த கருத்துகளைக் கடிதமாக எழுதுக.


                                                                                                                                    3, முத்து வீதி,
                                                                                                                                    முத்தியால்பேட்டை,
                                                                                                                                    10.06.2019.
அன்புள்ள முருகனுக்கு,
            வணக்கம். இங்கு அனைவரும் நலம். அங்கு உன் குடும்பத்தாரின் நலத்தை அறிய ஆவல்.
            எனது பிறந்த நாள் நிகழ்ச்சி சிறப்பாக முடிவடைந்தது. நீ எனக்கு பரிசாக அனுப்பிய புத்தகம் கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி.
            என் விருப்பம் அறிந்து சிறந்த பரிசுப் பொருளை அனுப்பி இருக்கிறாய். நீ அனுப்பிய புத்தகத்தைப் படித்து முடித்துவிட்டேன். நல்ல புத்தகம் படித்த நிறைவு. அந்த மகிழ்ச்சியை உன்னுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
            கால் முளைத்த கதைகள்புத்தகம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. உலகமெங்கிலும் உள்ள பழங்குடிகளின் நம்பிக்கைகள், கற்பனைகள் ஆகியவை இக்கதைகளில் வெளிப்படுகின்றன.
            பழங்குடிகளிடம் விந்தையான பல கருத்துகள் நிறைந்துள்ளன. அக்கருத்துகளை எளிய, இனிய நடையில் எழுத்தாளர் எழுதியுள்ளார். இந்த நூல் மேலும் மேலும் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டும் விதத்தில் அமைந்துள்ளது. அதற்காக எழுத்தாளருக்கும், இந்த நூலினைப் பரிசாக தந்த உனக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
                                                                                                                                    அன்புடன்,
                                                                                                                                    அமுதன்.
உறைமேல் முகவரி
முருகன்,
4, முல்லை வீதி,
மைலாப்பூர்,
சென்னை  18.