Saturday, 7 December 2019

நீங்கள் சென்று வந்த சுற்றுலாக் குறித்து உங்கள் நண்பனுக்குக் கடிதம் எழுதுக.


                                                                                                        10, தாழை வீதி,
                                                                                                        முத்தியால்பேட்டை,
                                                                                                        புதுவை- 3.
                                                                                                        10.8.2019
அன்புள்ள நண்பனுக்கு,
                 உன்னை என்றும் மறவாத அழகன் எழுதும் கடிதம். இங்கு அனைவரும் நலம். அதுபோல் உன் அப்பா, அம்மா, தம்பி, தங்கை நலம் குறித்து எழுதவும். நான், என் பள்ளி நண்பர்களுடன் கன்னியாகுமரிக்குச் சுற்றுலா சென்று வந்தேன். அது குறித்து இக்கடிதத்தில் எழுதுகிறேன்.
                 இந்தியாவின் தென்கோடிப் பகுதியான கன்னியாகுமரிக்குச் சென்றோம். மிக உயரமான திருவள்ளுவர் சிலை எங்களைப் பிரமிக்க வைத்தது. விவேகானந்தர் பாறைக்குச் சென்று மூன்று கடல்களின் சங்கமத்தைப் பார்த்து எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தோம்.
                 கன்னியாகுமரியில், காலையில் கண்ட கதிரவனின் உதயக் காட்சியின் நினைவோடு புதுவை வந்தடைந்தோம். நான் கண்ட காட்சிகளை நீயும் கண்டு மகிழ வேண்டும் என்பது என் விருப்பமாகும். வாய்ப்புக் கிடைக்கும் போது நீயும் உன் குடும்பத்தாருடன் கன்னியாகுமரிக்குச் சென்று வரவும்.
                                                                                    இப்படிக்கு,
                                                                           உன் அன்பு நண்பன்
                                                                                     க. அழகன்.
உறைமேல் முகவரி
அ. கதிரவன்,
8, தேரடி வீதி,
முத்து நகர்,
செஞ்சி  604202.

தாய்மொழிப் பற்று


முன்னுரை:
          நம்மைப் பெற்றத் தாயைவிட உயர்வானது நம் தாய்மொழி. ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் தாய்மொழியே உயிரைக் காட்டிலும் சிறப்பானது. தாய்ப்பாலுடன் கலந்து ஊட்டப் பெறுவது தாய்மொழி. அதைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
மொழி பற்றிய விளக்கம்:
          மனிதன் தன் எண்ணங்களை, மனித உணர்ச்சிகளை பிறருக்கு வெளிப்படுத்துவதற்காக அவனால் உருவாக்கப்பட்டதே மொழியாகும். வாயினால் பேசப்படுவதுப் பேச்சு மொழியாகும். வரி வடிவில் எழுதப்படுவது எழுத்து மொழியாகும்.
தாய் மொழி:
          நாம் பிறந்தது முதல் அறிந்து, பேசிக்கொண்டிருக்கும் மொழியைத் தாய்மொழி என்கிறோம். அவரவர் தாய்மொழி அவரவர்க்கு உயர்வானதே. பல மொழிகள் கற்றவராயினும் ஒருவரது சிந்தனை அவர்தம் தாய்மொழியிலேயே அமையும். உலகின் சிறந்த சிந்தனையாளர்கள் யாவரும் தம் தாய்மொழியிலேயே தத்தம் கருத்துகளை நூல்களாகப் படைத்துள்ளனர்.
தாய்மொழிப் பற்று:
          ஒரு மொழி வாழ்ந்தால்தான் அம்மொழி பேசும் இனம் வாழும்; மொழி வீழ்ந்தால் இனம் வீழும் என்பது உண்மையாகும். ‘தன்னைப் பழித்தவனைத் தாய் தடுத்தால் விட்டுவிடு; தமிழைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடாதே!’ என்பார் பாவேந்தர்.
தாய்மொழிப் பற்றுக்கொண்ட சான்றோர்:
          வீரமாமுனிவர், கால்டுவெல், மறைமலை அடிகளார், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, சோமசுந்தரபாரதியார், கதிரேசன் செட்டியார், இரா.பி. சேதுப்பிள்ளை, திரு.வி.க., உ.வெ.சா., பாரதியார், பாரதிதாசன், தேவநேயப்பாவாணர், மு.வரதராசனார்  போன்றோர் தணியாத தாய்மொழிப் பற்றுக்கொண்ட சான்றோராவர்.
நமது கடமை:
          நாடும் மொழியும் நமது இரு கண்கள் போன்றவை. இவ்விரண்டன் மீதும் பற்றுக்கொள்ளாதவன் மனிதனே அல்லன். ஒரு மொழியை வாழ்வாங்கு வாழச் செய்யும் கடமை அதனைப் பேசும் ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு.
முடிவுரை:
          மிகப் பழமையானதாய் விளங்கும் நம் தாய்மொழியின் மீது பற்றுக்கொள்ள வேண்டும். நம் தாய்மொழியாம் தமிழை வளர்ப்போம்; நாமும் வளர்வோம்.

Thursday, 5 December 2019

விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற உன் நண்பனுக்குப் பாராட்டுக் கடிதம் எழுதுக.


                                                                                      8, முல்லை வீதி,
                                                                                      முத்தியால்பேட்டை,
                                                                                      புதுவை 3.
                                                                                      10.8.2019
அன்புள்ள நண்பனுக்கு,
          உன்னை என்றும் மறவாத நண்பன் மணியன் எழுதும் கடிதம். இங்கு அனைவரும் நலம். உன் அப்பா, அம்மா, தம்பி, தங்கை அனைவரின் நலன் குறித்து எழுதவும்.
          உங்கள் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளுள் நூறு மீட்டர் ஓட்டப்பந்தையம், உயரம் தாண்டுதல் போட்டி ஆகியவற்றில் நீ முதலிடம் பெற்று வெற்றி பெற்றதை அறிந்து நானும் என் பெற்றோரும் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தோம். உனக்கு எங்கள் பாராட்டுகள்.
          நீ இன்னும் பயிற்சி எடுத்து, மண்டல அளவிலும், மாவட்ட அளவிலும் வெற்றி பெற்று தேசிய அளவிலான போட்டிகளில் விளையாட வேண்டும்.
          அதிக வெற்றிகளைக் குவித்து, நீ படிக்கும் பள்ளிக்கும், உன் பெற்றோருக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று உன்னை வாழ்த்துகிறேன்.
                                                                                                இப்படிக்கு,
                                                                                            அன்புத் தோழன்
                                                                                                அ. மணியன்.
உறைமேல் முகவரி
மு. அறிவழகன்,
10, முத்துத் தெரு,
அடையாறு,
சென்னை 608048.