Tuesday, 3 December 2019

உங்கள் நண்பர், பிறந்த நாள் பரிசாக அனுப்பிய எழுத்தாளர் எஸ். இராமகிருட்டிணனின் ‘கால் முளைத்த கதைகள்’ என்னும் நூல் குறித்த கருத்துகளைக் கடிதமாக எழுதுக.


                                                                                                                                    3, முத்து வீதி,
                                                                                                                                    முத்தியால்பேட்டை,
                                                                                                                                    10.06.2019.
அன்புள்ள முருகனுக்கு,
            வணக்கம். இங்கு அனைவரும் நலம். அங்கு உன் குடும்பத்தாரின் நலத்தை அறிய ஆவல்.
            எனது பிறந்த நாள் நிகழ்ச்சி சிறப்பாக முடிவடைந்தது. நீ எனக்கு பரிசாக அனுப்பிய புத்தகம் கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி.
            என் விருப்பம் அறிந்து சிறந்த பரிசுப் பொருளை அனுப்பி இருக்கிறாய். நீ அனுப்பிய புத்தகத்தைப் படித்து முடித்துவிட்டேன். நல்ல புத்தகம் படித்த நிறைவு. அந்த மகிழ்ச்சியை உன்னுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
            கால் முளைத்த கதைகள்புத்தகம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. உலகமெங்கிலும் உள்ள பழங்குடிகளின் நம்பிக்கைகள், கற்பனைகள் ஆகியவை இக்கதைகளில் வெளிப்படுகின்றன.
            பழங்குடிகளிடம் விந்தையான பல கருத்துகள் நிறைந்துள்ளன. அக்கருத்துகளை எளிய, இனிய நடையில் எழுத்தாளர் எழுதியுள்ளார். இந்த நூல் மேலும் மேலும் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டும் விதத்தில் அமைந்துள்ளது. அதற்காக எழுத்தாளருக்கும், இந்த நூலினைப் பரிசாக தந்த உனக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
                                                                                                                                    அன்புடன்,
                                                                                                                                    அமுதன்.
உறைமேல் முகவரி
முருகன்,
4, முல்லை வீதி,
மைலாப்பூர்,
சென்னை  18.

Wednesday, 27 September 2017

நான் முதலமைச்சரானால்



முன்னுரை:
            நான் முதலமைச்சரானால் என்ன பணிகளைச் செய்வேன் என்பதையும், என்னென்ன திட்டங்களை நிறைவேற்றுவேன் என்பதையும் கூற விரும்புகிறேன்.
மாணவர்களுக்குப் பயன்தரும் திட்டங்கள்:
            மாணவர்கள் சிரமமின்றி பள்ளிக்குச் சென்றுவர சிறப்புப் பேருந்துகளை இயக்க உத்தரவிடுவேன். ஏழை மாணவர்களும் உயர் கல்வி பெற உதவித்தொகை வழங்குவேன். பெண் கல்விக்கு ஊக்கமளிப்பேன்.
உழவர் நலம்:
            ஏரி, ஆறு, வாய்க்கால் போன்ற நீர்ப்பிடிப்புப் பகுதிகளை ஆழப்படுத்துவேன். உழவர்கள் தங்கள் விளைபொருளுக்கு நல்ல விலைபெற வழிவகுப்பேன். வேளான் ஆய்வுக்கூடங்கள் அமைப்பேன்.
மின் உற்பத்தியைப் பெருக்குவேன்:
            மின் பற்றாக்குறையைப் போக்க புதிய மின் உற்பத்தி நிலையங்கள் துவங்க உத்தரவிடுவேன். தொழிற்சாலைகளை ஏற்படுத்தி அனைவருக்கும் வேலைவாய்ப்பளிக்க விரைந்து செயல்படுவேன்.
முடிவுரை:
            உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றை அனைத்து மக்களும் பெற்று இன்புற்று வாழ வழிவகை காண்பேன். கல்வி வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்களை வகுத்துச் செயல்படுத்துவேன். அனைவரும் எனக்கு ஆதரவு தர அன்புடன் வேண்டுகிறேன்.

Saturday, 3 June 2017

காகிதம் தன் வரலாறு கூறுதல்



முன்னுரை:
                        வணக்கம் மாணவர்களே! என் பெயர் காகிதம். என்னைத் தூய தமிழில்தாள்என்று கூறுவர். நான், என்னுடைய வரலாற்றை உங்களுக்குத் தெறிவிக்கிறேன்.
தோற்றமும் வளர்ச்சியும்:
                        ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே எகிப்தியர்கள்பேப்ரஸ்என்னும் மரப்பட்டையைப் பயன்படுத்தி எனக்கு முதல்முதலாக வடிவம் கொடுத்தார்கள். கி.மு. 105-ஆம் ஆண்டிலேயே சீன நாட்டைச் சேர்ந்த டுசாய்லுன்என்பவர் மரப்பட்டையைக் கொண்டு என்னை உருவாக்கினார்.
                        1850-ஆம் ஆண்டு ஜெர்மனியைச் சார்ந்தகாட்லாப் செல்லர்என்பவர் மரக்கூழிலிருந்து என்னைப் புதிய வடிவில் தயாரித்தார். தற்பொழுது வேதியல் முறையில் பல வண்ணங்கள் கொண்டர  தாள்கள் தயாரிக்கிறார்கள். பருத்தியிலை,  கருப்பஞ்சக்கை ஆகியவற்றைப் பயன்படுத்தியும் என்னைத் தயாரிக்கிறார்கள்.
பயன்கள்:
                        அலுவலகங்கள், பள்ளிக்கூடங்கள், மருத்துவ மனைகள் என எல்லா இடத்திலும் நான் பயன்படுகிறேன். செய்திகளை மக்களுக்கு தெரிவிக்கிறேன். என்மேல் எழுதப்படும் எழுத்து மூலமாய் பத்திரங்கள், அரசாணைகள், உருபாய் நோட்டுகள் ஆகியவை மதிப்பு மிக்கவையாக ஆகின்றன.
முடிவுரை:
                        நான் பலவகையிலும் பிறருக்குப் பயன்படுகிறேன். அதுபோல், என் வரலாற்றைப் படிக்கிற நீங்களும் மக்களுக்குப் பயன்பட வேண்டும்.

Tuesday, 27 December 2016

நுகர்வோர் பாதுகாப்பு



முன்னுரை:
            உலகில் பிறந்தவர் அனைவருக்கும் உணவு, உடை, உறையுள் மூன்றும் அவசியமானதாகும். மனிதன் தனது தேவைக்குப் பல்வேறு பொருட்களை வாங்குகின்றான். பொருட்களை வாங்கி அனுபவிப்போரே நுகர்வோர் ஆவர்.
நுகர்வோர் பாதுகாப்பு:
            அமெரிக்காவைச் சேர்ந்த இரால்ப் நடார் என்பவர் நுகர்வோரின் நலன்களைக் காக்க இயக்கம் ஒன்றைத் துவக்கினார். இவ்வியக்கம் உலக நாடுகள் அனைத்திலும் இன்று செயல்பட்டு வருகிறது.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்:
            இந்தியாவில் நுகர்வோருக்கு ஏற்படும் குறைகளை நீக்கவும் இழப்பினை ஈடுகட்டவும் 1986இல் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது. பொருட்களில் கலப்படம் செய்யும் உற்பத்தியாளர், வணிகர் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்தில் வழி செய்யப்பட்டுள்ளது.
மக்கள் கடமை:
            நுகர்வோர் பொருட்களை வாங்கும்போது ஐ.எஸ்.ஐ முத்திரை, அக்மார்க் முத்திரை உள்ள பொருட்களை வாங்கவேண்டும். வாங்கும் பொருளுக்கு விற்பனைச் சீட்டு பெறவேண்டும். நுகர்வோர் தாம் வாங்கிய பொருள் தரம் குறைந்ததாக இருப்பின் நுகர்வோர் நீதி மன்றங்களை நாடி தீர்வு காணவேண்டும்.
முடிவுரை:
            வணிகர்கள் பொது நலன் கருதி நல்ல பொருட்களை விற்பனை செய்ய முன்வர வேண்டும். நுகர்வோர்களாகிய நாம் மிகவும் கவனத்தோடு பொருட்களை வாங்கிப் பயன்படுத்த வேண்டும்.

Tuesday, 29 November 2016

எங்கள் ஊர்



முன்னுரை:
            நான் பிறந்து, வாழ்ந்து வரும் ஊர் புதுச்சேரி ஆகும். இது புதுச்சேரி மாநிலத்தின் தலைநகரமாகவும் உள்ளது. சிறந்த வணிக நகரமாக விளங்கும் புதுச்சேரியின் சிறப்புகளை இக்கட்டுரை விளக்குகிறது.
ஊர் பெயர்க்காரணம்:
            அயல் நாட்டு வரலாற்று ஆசிரியர்கள்பொதுகே’, ‘பொதுகாஎனக் குறிப்பிடும் பகுதியே இன்றுபுதுச்சேரிஎனப் பெயர்பெற்றதாகக் கூறுகின்றனர்.
ஊர் எல்லைகள்:
            புதுச்சேரியின் எல்லைகளாகக் கிழக்கே வங்காள விரிகுடாக் கடலும், மேற்கிலும் வடக்கிலும் விழுப்புரம் மாவட்டமும், தெற்கே கடலூர் மாவட்டமும் அமைந்துள்ளன.
ஊர் அமைப்பு:
            புதுச்சேரி பிரெஞ்சியர் ஆட்சிக் காலத்தில் வெள்ளை நகரம், கருப்பு நகரம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. பிரெஞ்சியர் வாழ்ந்த பகுதி வெள்ளை நகரம் என்றும், தமிழர் வாழ்ந்த பகுதி கருப்பு நகரம் எனக் கூறப்பட்டது. இன்று இந்நிலை மாறிவிட்டது.புதுச்சேரியில் கிழக்கு மேற்காகவும், தெற்கு வடக்காகவும் சாலைகள் நேர்நேராக அமைந்திருப்பது தனிச் சிறப்பாகும்.
சிறப்பு:
            அரவிந்தர் ஆசிரமம், மணக்குள விநாயகர் கோயில், அருங்காட்சியகம், கடற்கரை, பாரதி பூங்கா, பாரதியார் நினைவு இல்லம், பாரதிதாசன் நினைவு இல்லம் ஆகியவை புதுச்சேரிக்குப் புகழ் சேர்ப்பவை.
முடிவுரை:
நான், எங்கள் ஊரான புதுச்சேரியைப் பற்றி எழுதியுள்ளேன். நீங்களும் உங்கள் ஊரின் சிறப்பை எழுதுங்கள்.