Sunday, 19 April 2015

பாரதியின் மொழிபெயர்ப்புப் பணிகள் – ஓர் ஆய்வு

முன்னுரை:
மொழி என்பது மனிதனால் படைக்கப்பட்ட கருத்துப் பரிமாற்றக் கருவி ஆகும். நிலவியல் சூழல், மனிதன் தனித்தனிக் குழுக்களாக வாழ்ந்தமை, அவர்களுக்கிடையே தகவல் பரிமாற்றம், போக்குவரத்துப் போன்றவை இல்லாமை ஆகியவை பல மொழிகள் உருவாகக் காரணங்களாக அமைந்துள்ளன. இத்தகைய சூழலில் ஒரு மொழி பேசும் மனிதன் இன்னொரு மொழி பேசும் மனிதனோடு தொடர்பு கொள்ள மொழிபெயர்ப்பு என்பது தேவையாகிறது.
பாரதியின் மொழிபெயர்ப்புப் பணிகளுக்குக் காரணமாய் அமைவது அவருடைய பன்மொழிப் புலமை ஆகும். அவருடைய பன்மொழிப் புலமைக்குக் காரணம் அவர் சிறுவயதில் இருந்து புலம்பெயர்ந்து வாழ்ந்தமையே ஆகும். எட்டயபுரத்திலிருந்து காசிக்கும் பின்னர்க் கல்கத்தா, சென்னை, புதுச்சேரி எனப் பன்மொழிச் சூழலில் வாழ்ந்தமை அவருடைய பன்மொழி அறிவை மேம்படுத்தியது. அவர் தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, வங்காளம், இந்தி, ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மொழிகளை அறிந்திருந்தார்.  இதனை,
“எனக்கு  நாலைந்து  பாஷைகளிலே  பழக்கம்  உண்டு    இவற்றிலே தமிழைப்  போல  வலிமையும்,  திறமையும்,  உள்ளத்தொடர்பும்  உடைய  பாஷை  வேறொன்றும்  இல்லை” (பாரதியார்  கட்டுரைகள், “தமிழ்”,ப. 167).
என்றும்
 “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
 இனிதாவதெங்கும் காணோம்”  (பாரதியார் கவிதைகள்,  ‘தமிழ்’ ப.193)
என்றும்  கூறுவதன் மூலம்  பாரதி  பன்மொழிப்  புலமை  பெற்றவர்  என்பதை  அவர் கூற்றின் மூலமாகவே அறிய முடிகிறது.    பாரதியின்  மொழிபெயர்ப்புப்  பணிகளை  ஆராய்வது  இக்கட்டுரையின்  நோக்கமாகும்.

பாரதியின்  மொழிபெயர்ப்புப் பணிகள்:
பாரதி பன்மொழி அறிவினைப் பெற்றிருந்தாலும் அவர் மொழிபெயர்ப்புகளைச் செய்வதற்குத் தூண்டுகோலாய் அமைந்தவை இதழ்களாகும்.  சுதேச மித்திரன், சக்கரவர்த்தினி, இந்தியா, விஜயா, சூரியோதயம், கர்மயோகி, தர்மம் ஆகிய தமிழ் இதழ்களிலும் பாலபாரதா என்னும் ஆங்கில இதழிலும் பாரதியார் பணியாற்றினார். இத்துடன் பாரதியின் எழுத்துக்கள் விவேகபாநு, ஞானபாநு, காமன் வீல், ஆர்யா, மெட்ராஸ் ஸ்டாண்டர்ட், நியூ இண்டியா, பெண்கல்வி, கலைமகள், தேசபக்தன், கதாரத்னாகரன் ஆகியவற்றிலும் இடம்பெற்றுள்ளன.  இத்தகைய இதழ்களில் அவர் மொழிபெயர்ப்புகளையும் செய்துள்ளார்.     அப்பணியால்  தமக்கேற்பட்ட  பயன் பற்றிக்  கூறுகையில்,
“இங்கிலீஷ்  ரொம்ப  நயமான  பாஷையானதால் இங்கிலீஷ்  எழுத்தின்  கருத்துச்  சிதைந்து  போகாமல் தமிழர்களுக்கு  அதை  ஸ்வாரஸ்யமாகச்  சொல்லும் பொருட்டு,  நேரான  தமிழ்ச்சொற்களை  நான் கண்டுபிடிக்க  வேண்டியதாயிற்று.  தமிழ்ப் பாஷையின்  கம்பீரமும்  ரஸமும்  அப்பொழுது  இன்னும்  தெளிவாய்த்  தெரிந்தன” (இலக்குமணப்பெருமாள். நா. காலத்தால்  கரைந்த  கவிஞன்: 14)
என்கிறார்.  மேலும்,
 “பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் 
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்” (பாரதியார் கவிதைகள், ‘தமிழ்’ ப.193)
என்பதில் பிறமொழியில் சிறந்த படைப்புகளைத் தமிழுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதைப் புலப்படுத்துகிறார். அதே பாடலில் பின்னிரண்டு அடிகளில்,
     “மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
        சொல்வதிலோர் மகிமை யில்லை
    திறமான புலமையெனில் வெளிநாட்டார்
        அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்” (பாரதியார் கவிதைகள், ‘தமிழ்’ ப.193)
என்று கூறியுள்ளதன் மூலம் தமிழ் மொழியில் உள்ள சிறந்த படைப்புகளைப் பிறமொழிக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற கருத்தினைப் புலப்படுத்துகிறார். இந்த இரண்டு வகைப் பணிகளையும் பாரதியாரே செய்துள்ளார். பாரதியார் நேரடி மொழிபெயர்ப்பாகவும் தழுவலாகவும் பிறமொழி இலக்கியங்களை மொழிபெயர்த்துள்ளார்.
சமஸ்கிருதப்  படைப்புகளை  மொழிபெயர்த்தல்:
    தெய்வபக்தியையும்  தேசபக்தியையும்  பற்றி  மக்கள்  அறிந்துகொள்ள  வேண்டுமென்று  பாரதியார்  எண்ணினார்.  அதற்காகச்  சமஸ்கிருத  மொழியிலிருந்து   வேதரிஷிகளின்  கவிதை,  பகவத்கீதை,  பதஞ்சலி  யோக  சூத்திரம்,  வியாசபாரதம்  ஆகியவற்றைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

வேதரிஷிகளின்  கவிதை:
    பாரதியார்  1913 – 1915ஆம் ஆண்டுகளில்  வேதரிஷிகளின்  கவிதையைத்  தமிழில்  மொழிபெயர்த்தார்.  இம்மொழிபெயர்ப்புச்  சுப்பிரமணிய  சிவாவால்  நடத்தப்பட்ட  “ஞானபானு”  இதழில்  மூன்றாண்டுகள் தொடர்ந்து வெளிவந்தது.
“இருக்கு  வேதத்தின்  முதல்  மண்டலத்திலுள்ள  ஏழு  பிரிவுகளில்  இருந்து இந்திரன்,  அக்கினி,  வருணன்  முதலிய  தேவர்களைப்  பற்றிய  178 இருக்குகளை பாரதியார்  தமிழாக்கம்  செய்துள்ளார்.” (பெ. சு. மணி, பாரதியாரின்  வேதரிஷிகளின்  கவிதை, ப. 205)
    இருக்கு  வேத  மொழிபெயர்ப்பானது  பாரதியின்  தொடக்ககால  முயற்சி  என்பது இங்குக்  குறிப்பிடத்தக்கது.
    ஈசாவாஸ்ய  உபநிடதம்  முழுமையும்,  கேநோபநிடதத்தில்  பதினாறு  உபநிடதச்  செய்யுள்களும்  பாரதியாரால்  மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
“எவன்  எல்லாம்  உயிர்களையும்  தன்னுள்ளே காண்கிறானோ,  எல்லா  உயிர்களிடத்தும்  தன்னைக்  காண்கிறானோ,  அவன்  பிறகு கூசுவதில்லை” (பாரதியாரின்  வேதரிஷிகளின்  கவிதை. ஈ.ஸா. 6.  207)
இச்சான்றின்  மூலம்  பாரதியார்  எளிமையும்,  தெளிவும்  வாய்ந்த  முறையில்  மொழிபெயர்த்துள்ளமையை அறியமுடிகிறது.
பகவத்கீதை:
    பாரதியாரின்  பகவத்கீதை  தமிழ்  மொழிபெயர்ப்பு  நூல் 1922ஆம்  ஆண்டு வெளியிடப்பட்டது.  பாரதி  செய்த  மொழிபெயர்ப்புக்கு  முன்  பதின்மூவர்  பகவத்கீதையை  மொழிபெயர்த்தனர்.  அவற்றுள்  ஏழு  மட்டுமே  முழுமையான  மொழிபெயர்ப்புகளாகும்.  இவற்றுள்  பாரதியின் மொழிபெயர்ப்புச்  சிறந்தது  என்பதற்கு,
“வடக்கே  தோன்றிய  மாமுனி  திலக  மகரிஷி  எழுதிய  பகவத்கீதை மொழிபெயர்ப்புக்கு  ஈடாக,  தென்னாட்டுப்  புலவர்  திலகம்  கவிசக்கரவர்த்தி  பாரதியார்  எழுதிய  உரை  விளங்குகிறதென்றால்  பாரதியின்  உரைக்கும்,  மொழிபெயர்ப்புத்திறனுக்கும்  வேறென்ன  சான்று  வேண்டும்.”(பாரதியார், பகவத்கீதை, பதிப்புரை. 4).
எனக்  கூறுவதிலிருந்து  அறியமுடிகிறது.  பாரதிக்குப்  பின்னர் ஏழு  பகவத்கீதை  மொழிபெயர்ப்புகள் வெளிவந்துள்ளன. அவற்றில் இரண்டு  செய்யுள்  வடிவிலும்,  ஐந்து  உரைநடை  வடிவிலும் உள்ளன. ஆயினும் பாரதியின் மொழிபெயர்ப்பே சிறந்து விளங்குகின்றது.
    பாரதியார்,  பகவத்கீதை  மொழிபெயர்ப்பின்  நோக்கம்  வேதத்தின்  கொள்கையை  விளக்கும்  பொருட்டே  என்கிறார்.  மனிதன் அனைத்துத்  துயரங்களிலிருந்தும்  விடுபடும்  வழியைக்  கூறுவது  தம் நூலின்  முதல்  கருத்தென்கிறார்.  மனிதன்  தன்  இன்ப,  துன்பங்களை  மன  வலிமையாலும்,  தெய்வ  பக்தியாலும்  பொறுத்துக்கொள்ள  வேண்டும்.  மனதறிய  பிறருக்குத்  துன்பம்  செய்யக்கூடாது  என்றும்,  தன்னுயிர்  போல்  பிற  உயிரையும்  மதிக்க  வேண்டும்  என்றும்  பகவத்கீதையில்  வலியுறுத்துகிறார்.
“இஃது  கர்மசாஸ்திரம்,  இஃது  பக்தி  சாஸ்திரம்,  இஃது  யோக  சாஸ்திரம்,  இஃது ஞான  சாஸ்திரம்,  இஃது  மோக்ஷ சாஸ்திரம்,  இஃது  அமரத்துவ  சாஸ்திரம்”
என்றும்,
“துர்யோதனாதியர்  காமக்  குரோதங்கள்,  அர்ஜுனன்  ஜீவாத்மா,            ஸ்ரீ கிருஷ்ணன்  பரமாத்மா.  இந்த  ரகசியம்  அறியாதவருக்குப்  பகவத்கீதை  ஒருபோதும் அர்த்தமாகாது.” (பாரதியார், பகவத்கீதை. 6)
என்றும்  கூறுகிறார்.
    பாரதியார்  எழுநூறு  சுலோகங்களைக்  கொண்ட  பகவத்கீதையின்  மூலத்தை  எளிய  தமிழில்  மொழிபெயர்த்துள்ளார்.
    “துன்பங்களிலே  மனங்கெடா  தவனாய்
    இன்பங்களிலே  ஆவலற்  றவனாய்
    அச்சமும்  சினமும்  தவிர்த்தவ  னாயின்
    அம்முனி 
    மதியிலே  யுறுதி  வாய்ந்தவ  னென்ப” (பாரதியார் பகவத்கீதை. 68)
நல்லதையும்,  கெட்டதையும்  ஒருசேரக்  கருதுபவனே  அறிவில்  சிறந்தவன்  என்பதை  இவ்வரிகளில்  அறியமுடிகிறது.
    “புருஷோத்தமா,  உன்னை  நீயே  அறிவாய்
    பூதங்களானாய் !  பூதத்தலைவனே
    தேவதேவா !  வையத்திறைவா !”
என்று அருச்சுனன்  கிருஷ்ணனிடம்  கூறும்  உரையும்,
    “பல  நூறாகவும்,  பல்லாயிரமாகவும்
    வகை  பல,  நிறம்  பல, அளவு  பலவாகவும்
    என்  திவ்ய  ரூபங்களைப்  பார் !  பார்த்தா” (பாரதியார் பகவத்கீதை. 69)
என்று  கண்ணன்  கூறும்  உரையும்  தமிழில்  மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.  பாரதியின்  எளிமையான  மொழிபெயர்ப்புக்குச்  சான்றாகின்றன.  பகவத்கீதைக்கு  நீண்டதோர்  ஆராய்ச்சி  முன்னுரையைப்  பாரதியார்  எழுதியுள்ளார்.  இவ்வுரை  பகவத்கீதையை  ஒரு  வாழ்க்கை  விளக்கமாக  அறிமுகப்படுத்தி  வைக்கிறது.  பாரதியின்  பகவத்கீதையை  “மொழிபெயர்ப்பு”  எனக்  கூறுவதைவிட  “தமிழாக்கம்”  எனக்  கருத  இடமுண்டு.

பதஞ்சலி  யோக  சூத்திரம்:
    பாரதியார்  பதஞ்சலி  யோக  சூத்திரத்தின்  முதல்  பகுதியைத்  தமிழில்  மொழிபெயர்த்தார்.  இது  1909 – 1911இல்  “கர்மயோகி”  என்னும்  இதழில்  வெளிவந்தது.  1928இல்  இம்மொழிபெயர்ப்பு  நூலாக  வெளியிடப்பட்டது.
    பதஞ்சலியின்  யோக  சூத்திரத்தின்  முதல்  பகுதி  “ஸமாதிபாதம்”  என்பதாகும்.  இதில்  ஐம்பத்தொரு  சூத்திரங்கள்  உள்ளன.  பாரதியார்  ஐம்பது  சூத்திரங்களை  மட்டும்  மொழிபெயர்த்து  அவற்றிற்கு  விளக்க  உரை  கூறியுள்ளார்.  இந்நூல்  குறித்து  மகான்  அரவிந்தர்,
‘பாரதி  இந்தியத்  தத்துவங்களை  அனுபவத்தால்  உணர்ந்த  மேதையாவார்.  பதஞ்சலி  யோக  சூத்திரம்  என்ற  நூலுக்குப்  பாரதியார்  செய்த  மொழிபெயர்ப்பு  அருமையானது’ (பாரதியார்  புகழ்மாலை.  208) 
என்று  கூறியுள்ளார்.

வியாச  பாரதம்:
    வியாசர்  வடமொழியில்  எழுதிய  பாரதத்தில்  இடம்பெற்றுள்ள  “சூதாட்டச் சருக்கத்தைத்”  தழுவிப்  பாரதியார்  “பாஞ்சாலி  சபதம்”  என்னும்  குறுங்காப்பியத்தைப்  படைத்தார்.  இந்நூலில்  பாஞ்சாலியைப்  பாரதத் தாயாக  உருவகித்துத்  தேசபக்தியை  ஊட்டியுள்ளார். இந்நூலுக்குப் பாரதியார் எழுதியுள்ள முகவுரையில் பின்வருமாறு கூறியுள்ளார்.
“எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்துகொள்ளக்கூடிய சந்தம், பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு இவற்றினையுடைய காரியமொன்று தற்காலத்திலே செய்துதருவோன் நமது தாய்மொழிக்குப் புதிய உயிர் தருவோனாகின்றான். ஓரிரண்டு வருஷத்து நூற்பழக்கமுள்ள தமிழ்மக்க ளெல்லோருக்கும் நன்கு பொருள் விளங்கும்படி எழுதுவதுடன், காரியத்துக்குள்ள நயங்கள் குறைவுபடாமலும் நடத்துதல் வேண்டும்.
காரியம் மிகப் பெரிது; எனது திறமை சிறிது. ‘ஆசையால்’ இதனை எழுதி வெளியிடுகின்றேன், பிறருக்கு ஆதர்சமாக அன்று, வழிகாட்டியாக.
  இந் நூலிடையே திருதராஷ்டிரனை உயர்ந்த குணங்களுடையவனாகவும், சூதில் விருப்பமில்லாதவனாகவும், துரியோதனனிடம் வெறுப்புள்ளவனாகவும் காட்டியிருக்கன்றேன். அவனும் மகனைப் போலவே துர்க்குணங்களுடையவன் என்று கருதுவோரு முளர். எனது சித்திரம் வியாசர் பாரதக் கருத்தைத் தழுவியது. பெரும்பான்மையாக, இந் நூலை வியாசபாரத்தின் மொழிபெயர்ப்பென்றே கருதிவிடலாம். அதாவது, ‘கற்பனை’ திருஷ்டாந் தங்களில் எனது ‘சொந்தச் சரக்கு’ அதிகமில்லை; தமிழ்நடைக்குமாத்திரமே நான் பொறுப்பாளி.
   தமிழ்ஜாதிக்குப் புதிய வாழ்வு தரவேண்டுமென்று கங்கணங் கட்டிநிற்கும் பராசக்தியே என்னை இத் தொழிலிலே தூண்டினாளாதலின், இதன் நடை நம்மவருக்குப் பிரியந்தருவதாகும் என்றே நம்புகிறேன்.”(பாரதியார் கவிதைகள். 414 – 415)
என்று கூறியுள்ளதன்மூலம் பாரதியார் ஓரளவு படிப்பறிவு உள்ள மக்களாலும் படித்துப் புரிந்துகொள்ளும் விதத்தில் எளிய நடையில், இனிய தமிழில் எழுதியுள்ளமையை அவரது கூற்றின் வாயிலாக அறியமுடிகிறது. துரியோதனனின் தலைநகரமான அஸ்தினாபுரத்தைப் பற்றி கூறும்பொழுது
    “வேரியங்  கள்ளருந்  தி – எங்கும்
        வெம்மத  யானைக  ளெனத்திரி  வார்,
    பாரினி  லிந்திரர்  போல் – வளர்
        பார்த்திவர்  வீதிகள்  பாடுவ  மே.” (பாரதியார் கவிதைகள். 420)
அங்குள்ள  மன்னர்கள்  பெண்  விரும்பிகள்,  கள்  உண்பவர்கள்,  தேவலோகத்தில் வாழும்  இந்திரர்  போன்று  வாழ்பவர்கள்  என்று  உவமை  நயம்  தோன்ற  எளிய  தமிழில்  எழுதியுள்ளமையை  அறியமுடிகிறது.  பாஞ்சாலி  சபதம்  பற்றித்  தேசபக்தர் சுப்பிரமணிய சிவா,   
‘பாரதியின்  தமிழ்  நடையையும்,  செய்யுள்  விசேஷத்தையும்  தமிழகத்தில்  பெரும்பான்மையோர் அறிவர். அவரால் இயற்றப் பெற்ற “பாஞ்சாலி சபதம்”  (முதல் பாகம்) மிக  அழகிய  வர்ணனைகள்  நிறைந்த ஒரு  காவியம்.  பாஷாபிமானிகளும்,  தேசாபிமானிகளும்  அவசியம்  படிக்க  வேண்டிய  புஸ்தகம்.’  (பாரதியார் புகழ்மாலை. 211)
என்று  கூறியுள்ளதன் மூலம்  இந்நூலின்  சிறப்புப்  புலப்படுகிறது.

வங்காளப்  படைப்புகளை  மொழிபெயர்த்தல்:
    பாரதியார் வங்காள மொழிப்  படைப்புகள்  சிலவற்றையும்  தமிழில்  மொழிபெயர்த்துள்ளார். அவற்றுள் வந்தே மாதரம் என்னும் பாடலின் மொழிபெயர்ப்பும் தாகூரின் கதைகளும் சிறந்தவையாகும்.

ஆனந்தமடம்:
    வடார்க்காடு  மாவட்டத்தைச்  சேர்ந்த  சர்மா என்பவர்  பக்கிம்  சந்திர  சாட்டர்ஜியின்  “ஆனந்தமடம்”  என்னும்  புதினத்தைத் தமிழில்  மொழிபெயர்த்தார்.  சர்மாவின்  வேண்டுகோளுக்கு  இணங்கிப்  பாரதியார்  “வந்தே  மாதரம்”  என்னும்  பாடலைத்  தமிழாக்கம்  செய்தார்.
    சில  ஆண்டுகளுக்குப்  பிறகு  “வந்தே  மாதரம்”  பாடலைப்  பாரதியார்  மீண்டும்  தமிழில்  மொழிபெயர்த்தார்.  இவ்வாறு  ஒரே  பாடலை  மீண்டும்  மொழிபெயர்த்ததன்  காரணத்தைப்  பாரதியார்  பின்வருமாறு  கூறுகிறார்,
“முன்னொருமுறை  முழுதும்  அகவலாக  ஒரு  மொழிபெயர்ப்பு  எழுதி  இருந்தேன். ஆனால்  அது  பாடுவதற்கு  எளிதாக  இல்லாததால்,  இப்பொழுது  பல  சந்தங்கள் தழுவி  மொழிபெயர்த்து  எழுதப் பட்டிருக்கின்றது.” (திருநாவுக்கரசு. க. த. தமிழ்க் கவிதையில் பாரதியின் தாக்கம். 394)
இவ்வாறு  அப்பாடலின்  முன்னுரையில்  தந்துள்ளார்.
    இந்தப்  பாடலின்  கருத்துகளும்,  தொடர்களும்  பாரதியாரின்  நாட்டுப்பாடல்கள்  பலவற்றில்  இடம்பெற்றுள்ளன.  இதற்குச்  சான்றாக,
        “வந்தே  மாதரம்  என்போம்  எங்கள்
           மாநிலத்  தாயை  வணங்குதும்  என்போம்”
என்ற  பாடல்  வரிகளைக்  கொள்ளலாம்.
    வங்கப்  புரட்சியாளர்  அரவிந்தர்  எழுதிய  “வேதப் பாடல்களின்  ஆராய்ச்சி  விளக்கம்”  என்ற  நூலில்  அக்கினி  பற்றிய  அரிய  செய்திகள்  இடம்பெற்றுள்ளன.  இவற்றைப்  படித்தறிந்த  பாரதியார்  “அக்கினிக்  குஞ்சு”  என்னும்  தலைப்பில்,
    “அக்கினிக்  குஞ்சொன்று  கண்டேன் – அதை
    அங்கொரு  காட்டிலோர்  பொந்திடை  வைத்தேன்;
    வெந்து  தணிந்தது  காடு; - தழல்
    வீரத்திற்  குஞ்சென்று  மூப்பென்று  முண்டோ?
            தத்தரிகிட  தத்தரிகிட  தித்தோம்.” (பாரதியார் கவிதைகள். 567)
என்று  அக்கினியை  உருவகப்படுத்திப்  பாடியுள்ளார். 
ஆங்கிலப்  படைப்புகளை  மொழிபெயர்த்தல்:
    பாரதியார்  ஆங்கில  மொழியிலும்  ஆழ்ந்த  புலமை  பெற்றிருந்தார்.  தமக்குப்  பிடித்த ஆங்கிலக்  கவிஞர்களின்  படைப்புகளைத்  தமிழில்  மொழிபெயர்த்தார்.  ஜான்ஸ்கர்  என்னும்  ஆங்கிலப் புலவன் ‘நக்‌ஷத்ர தூதன்’ என்ற இதழில் பிரசுரித்த “The Town of Let’s Pretend” என்ற பாட்டைக் “கற்பனையூர்”  என்னும் தலைப்பில்   தமிழாக்கம்  செய்தார்.  அந்த ஆங்கிலப்  பாடலின்  பொருளை, 
    “கற்பனையூர்  என்ற  நகர்  உண்டாம் – அங்கு
    கந்தருவர்  விளையாடுவாராம்
சொப்பன நாடென்ற சுடர்நாடு – அங்குச்
சூழ்ந்தவர் யாவர்க்கும் பேருவகை” (பாரதியார் கவிதைகள், ப.121.)
எனத்  தமிழரின்  பண்பாட்டிற்கு  ஏற்றவாறு  எளிய  நடையில்  மொழிபெயர்த்துள்ளார்.
    மா.ரா. ஷெர்மன்  என்ற  ஆங்கிலப்  பெண்மணியால்  எழுதப்பட்ட  கவிதையை  “இந்திய  அழைப்பு”  என்னும்  தலைப்பில்  பாரதியார்  தமிழாக்கம்  செய்தார்.
    “அன்பிற்கு  இனிய  இந்தியா !  அகில
    மதங்கள்,  நாடுகள்,  மாந்தருக்கு  எல்லாம்”
என்னும்  பாட்டு  அக்காலத்  தமிழருக்குப்  புத்துணர்ச்சி  அளித்தது.
    “நோகுச்சி”  என்னும் ஜப்பானியக்  கவிஞர்  எழுதிய  மடலினைப்  பாரதியின்  படைப்பான  “கடிதங்களில்”  மொழிபெயர்த்துத்  தந்துள்ளார்.  “ஹொக்ஷி”  என்னும்  ஜப்பானியக்  கவிஞரின்  “ஹைகூ”  கவிதையைப்  பாரதியார்,
        “தீப்பட்டு  எரிந்தது
         விழுமலரின்
                       அமைதி  என்னே”
என்று  மொழிபெயர்த்துள்ளார்.
    இவை  தவிர  1  புதிய  கட்சியின்  கொள்கைகள்
            2  தாகூர்  அருளிய  பஞ்ச  வியாஸங்கள்
            3  தாகூர்  சிறுகதைகள்
            4  பாரத  ஜன  சபை – முதலிரு  பாகங்கள்
            5  விவேகானந்தரின்  சொற்பொழிவுகள்,  கடிதங்கள்
ஆகிய  ஆங்கிலப்  படைப்புகளைப்  பாரதியார்  தமிழில்  மொழிபெயர்த்துள்ளார்.

பிரெஞ்சுப்  படைப்புகளை  மொழிபெயர்த்தல்:
    பாரதியார்  பத்தாண்டுகள்  புதுவையில்  தங்கியிருந்த  பொழுது  பிரெஞ்சு  மொழியைக்  கற்றார்.  “லா மார்ஸெலேஸ்”  என்னும்  பிரெஞ்சு  தேசிய கீதத்தை  “அன்னை  நன்னாட்டின்  மக்காள்”  என்று  தமிழில்  மொழிபெயர்ப்புச்  செய்தார்.  இதுவே  பாரதியார்  தமிழில்  தேசியகீதம் எழுத  வேண்டும்  என்ற எண்ணம்  தோன்றக்  காரணமாய்  அமைந்தது.

சீனப்  படைப்புகளை  மொழிபெயர்த்தல்:
    “சீயூசூனி”  என்னும்  பெண்  கவிஞர்  சீன  மொழியில்  பாடிய  பாட்டின்  தமிழ்  மொழிபெயர்ப்பானது  ‘பாரதி  கட்டுரைகள்’  என்ற  தொகுதியில்  “சியூசீன்  செய்த  பிரசங்கம்”  என்ற  பகுதியில்  இடம்பெற்றுள்ளது. இதனைப் பின்வருமாறு மொழிபெயர்த்துள்ளார்.
    “விடுத  லைக்கு  மகளிரெல்  லோரும்
    வேட்கை  கொண்டனம்;  வெல்லுவ  மென்றே
    திடம  னத்தின்  மதுக்கிண்ண  மீது
    சேர்ந்து  நாம்பிர  திக்கினை  செய்வோம்” (பாரதியார் கவிதைகள். 577)
பெண்விடுதலை என்னும் கருத்தாக்கம் இதில் இடம்பெற்றுள்ளது.

தமிழ்ப்  படைப்புகளைப் பிறமொழிக்கு  மொழிபெயர்த்தல்:
    பாரதியார்  தமிழ்  இலக்கியங்கள்  சிலவற்றை  ஆங்கிலத்தில்  மொழிபெயர்த்துள்ளார்.  பாரதியார்  தாம்  எழுதிய  கவிதைகள்  சிலவற்றை  ஆங்கிலத்தில்  மொழிபெயர்த்தார்.  அதை  ஆங்கில,  பிரெஞ்சு  மொழி  அறிஞர்கள்  தத்தம்  நாட்டுத்  தலைசிறந்த  இதழ்களில்  வெளியிட்டனர்.  காங்கிரஸ்  மகாசபை  சரித்திரத்தையும்,  நம்மாழ்வார்,  நாச்சியார்  பாசுரங்கள்,  அருணகிரிநாதர்  திருப்புகழ்  போன்றவற்றையும்  ஆங்கிலத்தில்  பாரதியார்  மொழிபெயர்த்துள்ளார்.  பாரதியார்  கதைகளை  மொழிபெயர்ப்பதில்  அதிக  நாட்டம்  செலுத்தவில்லை.  பதினொரு  தமிழ்ச்  சிறுகதைகளை  மட்டும்  ஆங்கிலத்தில்  மொழிபெயர்த்துள்ளார்.

தொகுப்புரை:
மேற்குறிப்பிட்டதிலிருந்து பின்வரும் கருத்துகள் பெறப்படுகின்றன. அவை, பாரதியார் மொழிபெயர்ப்புப் பணிகளுக்கு ஆதாரமாய் விளங்கியவை அவருடைய இடப்பெயர்ச்சியும் அதனால் ஏற்பட்ட பன்மொழிப் புலமையும் ஆகும்.
இதழ்களில் பணிபுரிந்தமை அவருடைய மொழிபெயர்ப்புத் திறனை மேலும் செழுமையாக்கியது.
அவர் சில இடங்களில் நேரடியாகவும் தழுவல் முறையிலும் மொழிபெயர்த்துள்ளார். சமஸ்கிருதம், வங்காளம், ஆங்கிலம், பிரெஞ்சு, சீனம் ஆகிய மொழிகளிலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும் மொழிபெயர்த்துள்ளார். அவருடைய மொழிபெயர்ப்புப் படைப்புகள் யாவும் ஓரிரு ஆண்டுகள் நூல்களைப் படிக்கும் பழக்கம் உடையோரும் எளிதில் படித்துப் புரிந்துகொள்ளும் விதத்தில் அமைந்திருக்கின்றன. பாரதியார் தமது கவிதைகள் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். இவ்வாறு அவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட கவிதைகள் வெளிநாட்டு இதழ்களிலும் வெளிவந்துள்ளன.   
பாரதியாரைக் கவிஞர் என்ற பார்வையிலேயே பலரும் அடையாளம் கண்டுள்ளனர். ஆனால் அவர் சிறந்த மொழிபெயர்ப்பாளர் என்பது இக்கட்டுரையின் மூலம் புலனாகின்றது.
துணைநூற்  பட்டியல்:
சாயபு மரைக்காயர்,மு. 2007. பாரதியார் படைப்புகளில் பல்சுவை. சென்னை: கங்கை புத்தக நிலையம்.
திருநாவுக்கரசு, க.த. 1984. தமிழ்க் கவிதையில் பாரதியின் தாக்கம். சென்னை: தமிழ்க் கடல் பதிப்பகம்.
பாரதியார். 1977. பகவத் கீதை. சென்னை: பூம்புகார் பதிப்பகம்.
பாரதியார். 1991. பாரதியார் கவிதைகள். சென்னை: மணிவாசகர் பதிப்பகம்.
மணி,பெ.சு. 2001. பாரதியார் ஆய்வுக் கட்டுரைகள். (முதல் பாகம்) சென்னை: பூங்கொடி பதிப்பகம்.
வேங்கடராமன், கா.கோ. 2001.  தமிழ்  இலக்கிய  வரலாறு,  கலையக  வெளியீடு.
ஜெயா,வ. 1996. பாரதி தமிழ். சென்னை: மணிமேகலைப் பிரசுரம்.

No comments:

Post a Comment