முன்னுரை:
“கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்” என்றார் நாமக்கல் கவிஞர். நாம் கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொண்டால் வெளியே வேலை தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை. நம் வீட்டிலேயே கைத்தொழிலைச் செய்து வருவாய் ஈட்டலாம்.
வேலைவாய்ப்பு:
இன்று படித்துவிட்டு வேலை கிடைக்காமல் வருந்துவோர் பலர் உள்ளனர். அவர்கள் அனைவரும் வேலை வாய்ப்பை மட்டுமே எதிர்பார்த்துக் காத்திருந்தால் ஏமாற்றமே கிட்டும். சொந்தமாய்த் தொழில் தொடங்க வேண்டும் என்ற முனைப்போடு ஒரு கைத்தொழிலைக் கற்றுக்கொண்டுவிட்டால், வீட்டிலேயே தொழில் செய்து வருவாய் பெற முடியும்.
கைத்தொழில்கள்:
கைத்தறி நெசவு, செக்காடுதல், பாய் பின்னுதல், கூடை பின்னுதல், தச்சி வேலை செய்தல், கயிறு திரித்தல், மட்பாண்டம் செய்தல், தீப்பெட்டி செய்தல், தேனி வளர்த்தல் போன்ற கைத்தொழில்களை எளிதாகக் கற்றுப் பயன் பெறலாம்.
கைத்தொழிலின் பயன்கள்:
கைத்தொழிலைக் கற்றுக் கொள்வதால் தனிமனித வருவாய் பெருகி வளம் பெறலாம். அனைத்து மக்களுக்கும் வேலைவாய்ப்புக் கிடைக்கும். சிற்றூர் மக்கள் வேலை தேடி நகரை நோக்கிச் செல்ல வேண்டியதில்லை. அவரவர் ஊரில் இருந்தே வேலை செய்யலாம்.
அரசின் உதவி:
கைத்தொழிலை ஊக்கப்படுத்தும் நோக்கில் அரசு பல சலுகைகளை வழங்கி வருகிறது. தொழில் பயிற்சி கூடங்கள் மூலம் கைத்தொழிலுக்கான இலவச பயிற்சி அளிக்கிறது. மகளிர் சுய உதவிக்குழுக்களை உருவாக்கி, கைத்தொழில் வளர்ச்சிக்கு நிதி உதவி தந்து ஊக்குவித்து வருகிறது. வங்கிகள் குறைந்த வட்டியில் கடன் கொடுத்து உதவுகின்றன.
முடிவுரை:
‘செய்யும் தொழிலே தெய்வம் – அந்தத்
திறமைதான் நமது செல்வம் . . . . . ’
என்னும் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பாடலுக்கு ஏற்ப, ஏதேனும் ஒரு கைத்தொழில் கற்றுக்கொண்டு அதனை சிறப்பாய்ச் செய்தால் வேலை வாய்ப்பைப் பெருக்கலாம். வறுமை நீங்கி வளம் பெருகும் என்பதில் ஐயமில்லை.