ஒருவரைப் பல வகையிலும் உயர்த்துவது அவருடைய உழைப்பே ஆகும். உழைப்பு ஒருவரை உயர்த்துவதோடு அவருடைய குடும்பத்தையும், நாட்டையும் உயர்த்தும். அதனால் இக்கட்டுரை உழைப்பின் பயன், அதன் சிறப்பு, நேர்மையான உழைப்பு ஆகியவற்றை விளக்குகிறது.
உழைப்பின் பயன்:
ஒரு செயலைச் செய்ய வேண்டும் என்று எண்ணுவது பெரிதல்ல. அதனைச் செயல்படுத்தி அதற்கு ஏற்றவாறு உழைக்க வேண்டும். அவ்வாறு, கடுமையாக உழைப்பவர்கள் விதியைக்கூட தூர விரட்டிவிடுவார்கள். கடுமையான உழைப்பிற்கு ஈடு இணை எதுவுமே இல்லை. கடின உழைப்பு ஒருவனை வெற்றியை நோக்கி கைப்பிடித்து அழைத்துச் செல்லும்.
உழைப்பின் சிறப்பு:
கஞ்சியே ஆனாலும் நம் உழைப்பால் கிடைத்ததாக இருக்க வேண்டும். பறவை, விலங்கினங்கள் உணவைத் தேடிச் சென்று உண்டு வாழ்கின்றன. அதுபோல் நாம் வாய்ப்புள்ள இடத்தைத் தேடிச் சென்று உழைத்து உயர்வதே சிறப்பானது.
நேர்மையான உழைப்பு:
நம் உழைப்பு நேர்மையானதாய் இருக்க வேண்டும். பிறர் பாராட்டும்படி உழைக்க வேண்டும். உழைக்காமல் பெற்ற பொருள் நமக்கு நிலைக்காது. இக்கருத்தை, ‘உழைக்காதப் பணம் கைசேராது’ என்ற பழமொழி கூறுகிறது.
முடிவுரை:
செய்யும் தொழிலைத் தெய்வமாய் மதித்து, நம் வாழ்க்கையில் உழைத்தால் வெற்றி நிச்சயம் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். எந்த தொழிலானாலும் அதை ஈடுபாட்டோடு செய்வோம். அது நிச்சயம் நம்மை உயர்த்தும்.
உழைப்போம் உயர்வோம்!
நாட்டை வளப்படுத்துவோம்!