Tuesday, 8 June 2021

ஒற்றுமையே உயர்வு

முன்னுரை:

            ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே, நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வே’ என்று பாரதியார் பாடியுள்ளார். மனித வாழ்வுக்கு உயர்வு தரும் ஒற்றுமை பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

வள்ளுவர் கூறும் ஒற்றுமை:

            ஒற்றுமையின் பலத்தை அறிந்த வள்ளுவர் ‘ஒப்புரவு அறிதல்’ என்ற அதிகாரத்தின் மூலம் அதனை விளக்கியுள்ளார்.

                        ‘புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறலரிதே

                        ஒப்புரவின் நல்ல பிற’

என்ற குறளின் பொருள் ஒற்றுமையைப் போல் வேறொன்றைத் தேவருலகம் சென்றாலும் பெற இயலாது என்பதாகும்.

ஒற்றுமையே உயர்வு:

            ‘ஒற்றுமையே பலம்’, ‘ஊருடன் கூடி வாழ்’, ‘ஒற்றுமை இல்லா குடும்பம் ஒருமிக்கக் கெடும்’, ‘ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்’, ‘கூடித் தொழில் செய்’, ‘தேசத்தோடு ஒத்து வாழ்’ என்பன ஒற்றுமையின் உயர்வை கூறும் பொன்மொழிகளாகும்.

இயற்கை காட்டும் ஒற்றுமை:

            பல மரங்களும், செடிகளும் இணைந்தால்தான் இயற்கை உயிர் பெறுகிறது. மரங்களின் ஒற்றுமையால் சுற்றுச்சூழல் தூய்மை பெறும். சிறு சிறு மழைத்தூறலால் நீர் நிலைகள் நிரம்புகிறது. மர வேர்களின் ஒற்றுமை மண்ணரிப்பை தடுக்கிறது.

ஒற்றுமைக்கு வழி:

            ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ என்னும் உயரிய சிந்தனை ஏற்பட வேண்டும். சாதி வேற்றுமையை ஒழிக்க வேண்டும்.

முடிவுரை:

            மக்களிடையே ஒற்றுமை இல்லாவிட்டால், நாட்டின் மீது அயல் நாட்டினர் படையெடுக்க நேரிடும். அதனால், நாம் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்வோம்.

 

No comments:

Post a Comment