Thursday, 19 December 2019

பயணங்கள் பலவகை


முன்னுரை:
            பயணம் செய்வதில் சிறுவர் முதல் முதியவர் வரை அனைவரும் விரும்புவர். அப்பயணம் தரைவழிப் பயணம்,  நீர்வழிப் பயணம்,  வான்வழிப் பயணம் என மூன்று வகைப்படும். இவற்றைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
பயணத்தின் தேவை:
            ‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ இது ஔவை சொன்ன அமுதமொழி. தொழில் நிமித்தமாகப் பயணம் மேற்கொள்வதும் உண்டு. சுற்றுப்பயணம் மேற்கொண்டால் பல நாடுகளைப் பார்க்கலாம். அங்குள்ள கலைநயம் மிக்க சிற்பங்கள், கோயில்கள், கலைப்பொருட்கள் ஆகியவற்றைக் கண்டு மகிழலாம்.
தரைவழிப்பயணம்:
            தரைவழிப்பயணம், கால் நடையாகவோ, வாகனங்கலின் மூலமாகவோ நடைபெருகிறது. மிதிவண்டி, பேருந்து, தொடர் வண்டி ஆகியன தரைவழிப்பயணத்துக்குப் பெருந்துணை புரிகின்றன. இப்பயணம் பெரும்பாலும் உள் நாட்டுப் பயணமாகவே இருக்கும்.
கடல்வழிப் பயணம்:
            வானூர்தி கண்டுபிடிக்கப்படாத காலத்தில், வெளிநாடு செல்ல கடல்வழிப்பயணமே உதவியது. கப்பல்கள் மூலம் பொருட்கள் துறைமுகத்திலிருந்து ஏற்றுமதி இறக்குமதி செய்யப்பட்டன. தோணி, ஓடம், படகு, புணை, மிதவை, தெப்பம் போன்றவை சிறிய நீர்நிலைகளைக் கடக்கப் பயன்படுத்தினர்.  வங்கம், கலம், நாவாய் ஆகியன கடல்வழிப்பயணத்துக்கு பயன்படுத்தினர்.
வான்வழிப் பயணம்:
            தொழில் நுட்ப வளர்ச்சியின் பயனாக தற்போது வானூர்தி பயணம்  சிறப்பாக நடைபெருகிறது. இவ்வகைப் பயணத்தால் பொருட்செலவும் பயண நேரமும் குறைகிறது. அரசுத் துறையில் இருப்பவர்கள், வணிகர்கள், தொழிலதிபர்கள் போன்றோர் வேலை நிமித்தமாக விரைவாகச் செல்ல வான்வழிப் பயணத்தை மேற்கொள்கின்றனர்.
முடிவுரை:
            பயணம், மனிதர்கள் வாழ்க்கையில் அன்றாடம் வந்து போகும் முக்கிய நிகழ்வு ஆகும். தரைவழிப் பயணத்தை அனைவரும் பயன்படுத்துவர். கடல்வழிப் பயணத்தில் எடை மிகுந்த பொருட்களை ஏற்றிச் செல்ல கப்பல்கள் பயன்படுகின்றன. வசதிபடைத்தோர் வான்வழிப் பயணத்தை அதிகம் விரும்புகின்றனர்.

Sunday, 15 December 2019

நூலகம்


முன்னுரை:
            ‘கல்வி கரையில கற்பவர் நாள் சில’ என்பர் சான்றோர். கற்பதற்குத் துணைபுரிபவை நூல்கள். அந்நூல்கள் உள்ள இடம் நூலகம். சான்றோர்கள் பலரையும், பேச்சாளர்கள் பலரையும் உருவாக்கிய நூலகம் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
நூலகத்தின் தேவை:
            பள்ளிப் பாடபுத்தகத்தை மட்டும் படித்து அறிவு பெற்றால் போதும் என்றில்லாமல், பலதுறை சார்ந்த நூல்களைக் கற்றுத் தெளிவு பெறலாம். வாழ்வியலுக்கான நற்பண்புகலை நூல்களின் கருத்து வழியே வளர்த்துக்கொள்ளலாம். பேச்சாளர்கள் பலரின் கருத்துகளைப் படித்தறியலாம். ஓய்வு நேரத்தைப் பயனுள்ளதாக மாற்றலாம். இக்காரணங்களுக்காக நூலகம் தேவைப்படுகிறது.
நூலகத்தின் வகைகள்:
            பள்ளி நூலகம், பொது நூலகம், ஆராய்ச்சி நூலகம், சிறப்பு நூலகம், தேசிய நூலகம் எனப் பல வகையான  நூலகங்கள் உள்ளன. இவை மட்டும் இன்றி பொது நூலகத்தின் கீழ் மாநில மைய நூலகம், மாவட்ட நூலகம், வட்டார நூலகம், பகுதி நேர நூலகம், நடமாடும் நூலகம் போன்றவையும் மக்களுக்கு உதவுகின்றன.
நூலகத்தில் உள்ளவை:
            நூலகத்தில் கதை, கட்டுரை, கவிதை, கல்வி, பொருளியல், வரலாறு, மருத்துவம், ஆன்மிகம், உலகியல், பொறியியல், போன்ற தலைப்புகளில் நூல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். மேலும்,நாளேடுகள், பருவ இதழ்கள் நூலகத்தில் படிக்கக் கிடைக்கும்.
படிக்கும் முறை:
            நூலகத்தில் சத்தம் போட்டுப் படிக்கக்கூடாது. நூல்களில் எவ்விதக் குறிப்பையும், கிறுக்குதலையும் செய்யக்கூடாது. படிக்க விரும்பும் நூல்களை நூலகரின் அனுமதி பெற்று எடுத்துப் படிக்க வேண்டும். நூல்களைச் சேதம்படுத்தாமல் படிக்க வேண்டும். நூலக விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
முடிவுரை:
            எத்துறை சார்ந்த நூல்களையும் செலவின்றிப் படித்துப் பயன்பெற உதவுவது நூலகம். வாழ்வில் வெற்றி பெற நூலகத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவோம். அறிவு வளரவும், ஆற்றல் பெருகவும் நூல்களைப் பேணிக் காக்கும் நூலகங்களைப் போற்றிப் பாதுகாப்போம்.

Thursday, 12 December 2019

பதிப்பகத்தாருக்குக் கடிதம்

அனுப்புநர்:
            தா. பாண்டியன்
            9ஆம் வகுப்பு ‘ஆ’ பிரிவு
            உயர்நிலை பள்ளி
            புதுவை   3.
பெறுநர்:
            மேலாளர்
            நெய்தல் பதிப்பகம்
            பாண்டி பஜார்
            தியாகராஜர் நகர்
            சென்னை  17.
ஐயா,
            பொருள் :  தமிழ் – ஆங்கிலக் கையடக்க அகராதி - பதிவு அஞ்சலில் அனுப்ப வேண்டி.
            வணக்கம். நான் புதுவை மாநிலத்தில்  உள்ள உயர்நிலை பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறேன். எங்கள் நூலகத்துக்குத் தங்கள் பதிப்பகம் வெளியிட்டுள்ள தமிழ் – ஆங்கிலக் கையடக்க அகராதி பத்துப் படிகள் அனுப்பிவைக்கவும். அதற்குரிய பணம் ரூ. 500 / - ஐ நான் பணவிடை மூலம் அனுப்பியுள்ளேன்.
            நூல்களை மேலே குறிப்பிட்டுள்ள முகவரிகுப் பதிவு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
                                                            நன்றி.
                                                                                                            இங்ஙனம்
                                                                                                            தா. பாண்டியன்
புதுவை
15.11.2019
உறைமேல் முகவரி:
            மேலாளர்
            நெய்தல் பதிப்பகம்
            பாண்டி பஜார்
            தியாகராஜர் நகர்
            சென்னை  17.

Saturday, 7 December 2019

நான் விரும்பும் தலைவர் – காமராசர்


முன்னுரை:
      மனித குலத்துக்கும் நாட்டுக்கும் அருந்தொண்டாற்றியவர் காமராசர். அவர், பாரத மக்களின் உள்ளங்களில் நிலையான இடத்தைப் பெற்றவர். காமராசர் காட்சிக்கு எளியவர், பழகுவதற்கு இனியவர். அப்பெருமகனாரைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
இளமையும் கல்வியும்:
      காமராசர், விருது நகரில் 1903 ஆம் ஆண்டு சூலை திங்கள் 15 ஆம் நாள் பிறந்தார். இவருடைய பெற்றோர் குமாரசாமி - சிவகாமி அம்மாள். இவருக்குப் பாட்டியார் வைத்த பெயர் ‘காமாட்சி’ என்பதாகும்.
      காமராசர் சிறுவயதிலேயே தந்தையை இழந்தார். குடும்ப சூழல் காரணமாகக் காமராசர் ஆறாம் வகுப்புக்கு மேல் தன் படிப்பைத் தொடர முடியவில்லை. தாய் மாமன் கடையில் வேலை செய்தார்.
தொண்டுகள்:
      காமராசர், நாட்டு விடுதலைப் போராட்டத்தில் சாதாரண தொண்டனாகச் சேர்ந்து உழைப்பால் உயர்ந்தவர். அவர் 1954 ஆம் ஆண்டு தமிழ் நாட்டின் முதலமைச்சராகப் பதவி ஏற்றார். தமிழகத்தில் கல்விப் புரட்சியை உருவாக்கினார். மாணவர்களுக்கு மதிய உணவு திட்டம் கொண்டுவந்தார். வேளாண்மை, தொழில் துறை வளர்ச்சிக்குத் திட்டங்கள் தீட்டி செயல்படுத்தினார்.
பண்பு நலன்கள்:
      ‘பேச்சைக் குறை; செயலை அதிகமாக்கு’ என்ற கொள்கையைப் பின்பற்றியவர் காமராசர். இந்திய நாட்டுப் பண்பாட்டினை எந்நிலையிலும் கைவிடாதவர். பெருந்தன்மை, எளிமை, வஞ்சனையற்ற உள்ளம், அஞ்சாமை ஆகிய பண்புகளைக் கொண்டவர்.
முடிவுரை:
      காமராசர், ஏழைப்பங்காளராய், செயல்வீரராய், கல்விக்கண் திறந்த முதல்வராய் வாழ்ந்தவர். தமக்கென வாழாது பிறருக்காக வாழ்ந்த காமராசரே நான் விரும்பும் தலைவர்.