Thursday, 19 December 2019

பயணங்கள் பலவகை


முன்னுரை:
            பயணம் செய்வதில் சிறுவர் முதல் முதியவர் வரை அனைவரும் விரும்புவர். அப்பயணம் தரைவழிப் பயணம்,  நீர்வழிப் பயணம்,  வான்வழிப் பயணம் என மூன்று வகைப்படும். இவற்றைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
பயணத்தின் தேவை:
            ‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ இது ஔவை சொன்ன அமுதமொழி. தொழில் நிமித்தமாகப் பயணம் மேற்கொள்வதும் உண்டு. சுற்றுப்பயணம் மேற்கொண்டால் பல நாடுகளைப் பார்க்கலாம். அங்குள்ள கலைநயம் மிக்க சிற்பங்கள், கோயில்கள், கலைப்பொருட்கள் ஆகியவற்றைக் கண்டு மகிழலாம்.
தரைவழிப்பயணம்:
            தரைவழிப்பயணம், கால் நடையாகவோ, வாகனங்கலின் மூலமாகவோ நடைபெருகிறது. மிதிவண்டி, பேருந்து, தொடர் வண்டி ஆகியன தரைவழிப்பயணத்துக்குப் பெருந்துணை புரிகின்றன. இப்பயணம் பெரும்பாலும் உள் நாட்டுப் பயணமாகவே இருக்கும்.
கடல்வழிப் பயணம்:
            வானூர்தி கண்டுபிடிக்கப்படாத காலத்தில், வெளிநாடு செல்ல கடல்வழிப்பயணமே உதவியது. கப்பல்கள் மூலம் பொருட்கள் துறைமுகத்திலிருந்து ஏற்றுமதி இறக்குமதி செய்யப்பட்டன. தோணி, ஓடம், படகு, புணை, மிதவை, தெப்பம் போன்றவை சிறிய நீர்நிலைகளைக் கடக்கப் பயன்படுத்தினர்.  வங்கம், கலம், நாவாய் ஆகியன கடல்வழிப்பயணத்துக்கு பயன்படுத்தினர்.
வான்வழிப் பயணம்:
            தொழில் நுட்ப வளர்ச்சியின் பயனாக தற்போது வானூர்தி பயணம்  சிறப்பாக நடைபெருகிறது. இவ்வகைப் பயணத்தால் பொருட்செலவும் பயண நேரமும் குறைகிறது. அரசுத் துறையில் இருப்பவர்கள், வணிகர்கள், தொழிலதிபர்கள் போன்றோர் வேலை நிமித்தமாக விரைவாகச் செல்ல வான்வழிப் பயணத்தை மேற்கொள்கின்றனர்.
முடிவுரை:
            பயணம், மனிதர்கள் வாழ்க்கையில் அன்றாடம் வந்து போகும் முக்கிய நிகழ்வு ஆகும். தரைவழிப் பயணத்தை அனைவரும் பயன்படுத்துவர். கடல்வழிப் பயணத்தில் எடை மிகுந்த பொருட்களை ஏற்றிச் செல்ல கப்பல்கள் பயன்படுகின்றன. வசதிபடைத்தோர் வான்வழிப் பயணத்தை அதிகம் விரும்புகின்றனர்.

No comments:

Post a Comment